ஸ்டீபன்
ஹாக்கிங்
நினைவு நாள் மார்ச்-14
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உளைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”
மனித சக்திக்கு அப்பாற்ப்பட்டதாக காலங்காலமாக
நம்பப்பட்டுவரும் ஊழ் (இன்று நமது நாட்டில் ஊழலுக்குத்தான் உண்மையில் அவ்வளவு வலிமை
உள்ளது.) விடாமுயற்சி உடையவரிடம் புறமுதுகிட்டு ஓடும். வள்ளுவப்பெருந்தகையின் இக்கருத்துக்கு
எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். உண்மையில் அவர் வாழ்ந்தது
வெறும் வாழ்க்கையல்ல. அறிவார்ந்த மனித குலம் உள்ளவரை நினைவு கூறத்தக்க வாழ்வு அவருடையது.
உடல் இயக்கம் முழுமையாக நின்று போன நிலையிலும், பேசும் திறனை இழந்த போதும் பல்வேறு
பொறிகளுடனான பிரத்யோக சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே, விண்வெளி ஓடமும் செல்ல இயலாத
கற்பணைக்கும் எட்டாத தொலைவுகளுக்கு, ஈடு இணையற்ற சிந்தனைச் சிறகுகளால் பயணித்து நாம்
வாழும் பேரண்டத்தின் இருண்ட பகுதிகளுக்கெல்லாம் வெளிச்சம் பாய்ச்சினார்.
லண்டனின் வடக்கு வெளிப்பகுதியில் ப்ராங்-இசபெல்
தம்பதிக்கு இரண்டாம் உலகப்போரின் உச்சத்தில், ஜனவரி-8, 1942-ல் தோன்றியது ஸ்டீபன் ஹாக்கிங் என்ற வானியல்
விடிவெள்ளி. தொலைநோக்கி கொண்டு நவீன வானியலுக்கு வழிகாட்டிய வானியல் அறிஞர் கலிலியோ
கலிலியின் முன்னூறாவது நினைவு நாளன்று தோன்றினார் இப்பேரறிவாளன். இளமையில் சாதரண மாணவர்.
சிறு சிறு குறும்புகள் செய்வார். படகுப்போட்டியில் ஆர்வம் உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலையில்
இயற்பியல் இளங்கலை பயின்றார். அளவாகவே படிப்பார். இறுதித்தேர்வில் இரண்டாம் வகுப்புக்கும்,
முதல் வகுப்புக்கும் இடையே நின்று பேராசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.
ஹாக்கிங்கின் கனவு, கேம்பிரிட்ஜில் வான் இயற்பியலில் ஆய்வு மாணவர் ஆவது. அதற்கு முதல்
வகுப்பு அவசியம். அச்சமயம் ஆக்ஸ்போர்டில் பிரத்யோகமாக, விளிம்பு நிலை மாணவர்க்குத்
(Border
line students) தகுதிகாண் நேர்முகத்தேர்வு
நடத்துவதுண்டு. அதன் மூலம் முதல் வகுப்பா, இரண்டாம் வகுப்பா என்பது இறுதி செய்யப்படும்.
(நமது பல்கலைக்கழகங்களில் விடைத்தாள் மதிப்பிடும் பணியில் ஒரு எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுகிறது.
வெற்றிபெறத் தேவையான 35
மதிப்பெண்ணுக்கு ஒன்றிரெண்டு குறைவாக இருந்தால் அந்த விடைத்தாள் சிறப்பு கவனம் பெறும்.
தேற்ற முடிந்தால் மாணவன் வெற்றி. கடைத்தேராதென்றால் முப்பதுக்கு கீழே அமுக்கப்படுவார்.)
ஸ்டீபன் ஹாக்கிங் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார்.
“உமது எதிர்காலத்திட்டம் என்ன?” இது கேள்வி.
“முதல் வகுப்பு கிடைத்தால் கேம்பிரிட்ஜ்.
இரண்டாம் வகுப்பானால் ஆக்ஸ்போர்டு.” இது பதில். இவரை பல்கலைக்கு வெளியே அனுப்புவதே
உச்சிதம் என்று முதல் வகுப்பு வழங்கப்பட்டது.
கேம்பிரிட்ஜில் படிக்கும்போது அவரது உடல்
செயல்பாட்டில் வினோதமான சில அறிகுறிகள் தோன்றின. மருத்துவராகிய தந்தை தன் மகனை மருத்துவச்
சோதனைகளுக்கு கொண்டு சென்றார். விடுமுறை முடிந்து பல்கலைக்கு செல்ல முடியாமல் சோதனைகள்
நீடித்தன. அவருக்கு தசை நார்களை இயக்கும் நரம்புகள் பாதிப்படைந்துள்ளது (Motor
neuron disease) கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நோய் தீவிரமடையலாம். அவரது செய்ல்பாடுகள் அனைத்தும் முடக்கப்படலாம். ஓரிரு ஆண்டுகளே
உயிர் வாழ்வது சாத்தியம். இந்நோய்க்கு எந்த மருத்துவத் தீர்வும் கிடையாது. உறவினர்கள்
மற்றும் மருத்துவர்களின் உரையாடல்களிலிருந்து ஹாக்கிங் இச்செய்தியை ஊகித்து அறிந்துகொண்டார்.
ஹாக்கிங் தன் வாழ்நாளில் எதிர்கொண்ட மோசமான நாட்கள் அவை. துருதுருவென இயங்கிய, பிரபஞ்ச
ஆய்வில் நாட்டமுடைய ஒரு இளைஞன் இருபத்தொரு வயதில் உயிருக்குக் கெடு வைக்கப்பட்டு மன
அழுத்தத்தில் முடங்கிப்போவது எத்துணை துயரமானது?. எந்நேரமும் அறையில் முடங்கிக்கிடந்தார்.
பல்கலை இதழில் “ஹாக்கிங் பெரும் குடிகாரராகிவிட்டார்” என்று எழுதி வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சினர்.
ஹாக்கிங் மருத்துவர்களிடம் கேட்டறிந்த ஒரு
செய்தி, தனது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு இல்லை என்பதாகும். ஆய்வுப் பணியைத் தொடருமாறு
அறிவுத்தப்பட்டார். “ஆய்வின்
முடிவில் உயிரோடு இருக்கப்போவதில்லை, பின் ஏன் அதைத் தொடர வேண்டும்?” இந்த வினா அவரைத் துளைத்தது. மன உளைச்சலுக்கு
மாற்றாகவே பெற்றோர்களும் மருத்துவர்களும் ஆய்வுப்பணியைப் பரிந்துரைத்தனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் முன்பாக தான்
படித்த பள்ளியில் படித்தவரும், வயதில் சற்று இளையவரும், ஹாக்கிங் வசித்த பகுதியிலேயே
வசித்தவருமான ஜேன் வில்டி என்ற இளம்பெண்ணை சந்தித்தார். ஹாக்கிங்கின் துடுக்குத்தனம்,
அறிவுக்கூர்மை மற்றும் வித்தியாசமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஜேன், அவரது தற்போதைய
நிலையை அறிந்து துணுக்குற்றார். கடவுள் நம்பிக்கை மிக்கவரும், வாழ்க்கை அர்த்தமுடையதாய்
இருக்க வேண்டுமென்ற எண்ணம் மிக்கவருமான ஜேன் தனக்கான பணி ஹாக்கிங்கை தேற்றி, இயங்க
வைப்பதே என முடிவெடுத்தார். ஹாக்கிங்கை உற்ச்சாகப்படுத்தும் முயற்ச்சியின் போதே அவர்கள்
இருவரும் தாங்கள் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்தனர். “நாம் இருவரும் இணைந்து நம் வாழ்வை பயனுடையதாக்குவோம்.
உனது தற்போதைய பின்னடைவை எதிர்த்து இருவரும் சேர்ந்து போராடுவோம்.” என்று கூறி ஜேன் ஹாக்கிங்கை உற்சாகப்படுத்தினார்.
ஹாக்கிங் வாழ்வில் வசந்தம் வீசத்தொடங்கியது. பின்னாளில் ஜேனுடனான தனது உறவை ஹாக்கிங்
இவ்வாறு பதிவு செய்கிறார். “ஜேனைச்
சந்தித்ததால்தான் நான் வாழும் துணிவைப் பெற்றேன். அவர் உதவி இல்லாவிடில் நான் எனது
பின்னடைவை எதிர்த்து போராடியிருக்க முடியாது.”
தனது உடல் பின்னடைவு மூளையை பாதிக்கவில்லை,
என்பதை ஹாக்கிங் தனக்கான பெருவாய்ப்பாக்கிக்கொண்டார். கோட்பாட்டியற்பியலுக்கான (Theoretical
Physics) ஆய்வுக்கூடம் மூளைதானே! தனக்கான துறை ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டதாகவே
ஹாக்கிங் உணர்ந்தார்.
காதலர்கள் தம்பதியாயினர். ஹாக்கிங் தனது
முனைவர் பட்டத்திற்க்கான ஆய்வைத் தீவிரப்படுத்தினார். ஜேன் தனது படிப்பு, பணி தேடல் இவற்றுடன் ஹாக்கிங்கை
தாரமாகவும், தாதியாகவும் பராமரித்தார். பணிச்சுமையால் ஜேன் சில சமயம் சோர்வுற்றார்.
ஆனால் துவளவில்லை. ஹாக்கிங்கின் ஆய்வுப்பணி முன்னோடி அறிவியளாளர்களால் கவனிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகள் கடந்தன. மருத்துவர்கள் விதித்த இரண்டு ஆண்டு கெடு முடிந்து மேலும்
இரண்டு ஆண்டுகள் ஆகின. அவருக்கு பெரிதாக ஒன்றும் நேரவில்லை. மாறாக ஒரு ஆண் குழந்தைக்குத்
தந்தையானார்.
ஹாக்கிங்கின் நெடுநாளைய நண்பராகிய பேராசிரியர்
கிப் அவருடனான முதல் சந்திப்பு பற்றி இவ்வாறு நினைவு கூறுகிறார். “நான் பிரின்ஸ்டன் பல்கலையில் ஆய்வுப்பட்டத்திற்க்கான
பணியை முடித்திருந்த சமயம். லண்டனில் ஐன்ஸ்டினின் பொதுச்சார்பியல் பற்றிய ஒரு கருந்தரங்கில்
கலந்துகொண்டேன். அத்தருணத்தில் நான் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஆய்வு மாணவரைப் பற்றி கேள்விப்பட்டேன்.
அவர் பிரபஞ்சத் தோற்றம் பற்றி புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைப்பதாக அறிந்தேன். ஒரு
சிறு வகுப்பறையில் கருத்தரங்கிற்கு வந்த சுமார் 100 பேர் நெருக்கியடித்த படி கூடினோம். அந்த
இளைஞர் பேச ஆரம்பித்தார் “ஹப்பில்
தொலைநோக்கி தரவுகள் பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன
நட்சத்திரங்கள் தங்கள் ஆயுக்கால முடிவில், எரிபொருள் தீர்ந்த நிலையில், குறிப்பிட்ட
அளவை விட பெரிதாய் இருந்தால், அவை
தங்களது பொருள் திணிவால் மிகுந்த ஈர்ப்புக்கு ஆட்பட்டு வீழ்ந்து படும் (Collapse
under extremely large gravity)
என்று கண்டுபிடித்துள்ளனர். வீலர் போன்ற பிரபல விஞ்ஞானிகள் அதுபோன்ற நிகழ்வுகளால் கருந்துளைகள்
எனும் ஒருமைப்புள்ளிகள் (Singularities) தோன்றுவதாகக் கூறுகின்றனர்.” இக்கருத்துக்களின் துணையாலும் வேறுசில கணிதவியல்
உத்திகளாளும், விரிவடைந்துகொண்டுள்ள பிரபஞ்சத்தைக் காலத்தால் பின்னோக்கிக் கற்பனை செய்து
பார்த்தால், சுமார் 10பில்லியன்
ஆண்டுககுக்கு முன் அடர்மிகு ஒருமைப்புள்ளியில் இருந்து (Singularity) வெடித்துச்சிதறியதே இன்றைய பிரபஞ்சம் எனும்
முடிவுக்கு வரலாம்.”
நோயின் விளைவாக ஏற்பட்ட சிறு தடுமாற்றங்களுடன்
ஆனால் ஆணித்தரமாக பேசிய ஸ்டீபன் ஹாக்கிங் பேராசிரியர் கிப்பை பெரிதும் வியக்க வைத்தார்.
இன்று நன்கு திருத்தியமைக்கப்பட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, பெருவெடிப்புச்
(Big
Bang Theory) சிந்தாந்தத்தின்
பிதாமகர் ஸ்டீபன் ஹாக்கிங். வானியல் ஆய்வில் அவர் சாதித்தவை ஏராளம். இங்கிலாந்து அரசு
ஹாக்கிங்கை புகழ்மிக்க லுகாசன் பேராசிரியராக்கி அழகு பார்த்தது. ராயல் சொசைட்டியின் உறுப்பினர், இங்கிலாந்து
ராணியின் அறிவியல் ஆலோசகர், அமெரிக்க அரசின் ஜனாதிபதி விருது, உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களின்
கௌரவ டாக்டர் பட்டம் என அறிவியல் உலகின் உச்சத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
ஹாக்கிங் எழுதிய “A Brief history of time” என்ற புத்தகம் ஒரு மில்லியன் பிரதிகள் விற்று
உலக சாதனை படைத்தது. சுமார் பதிமூன்று புத்தகங்கள் சில தனியாகவும் சில மற்றவர்களுடன்
இணைந்தும் எழுதியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்களாக ஹாக்கிங்கும்
ஜேனும் 25 ஆண்டுகள் மண வாழ்க்கையை முறித்துக்கொண்டது
வலிமிக்க தருணம். 2017
மார்ச் 14 அன்று ஹாக்கிங் தனது வாழ்க்கைப் பயணத்தை
முடித்துக்கொண்டார். அவர் மறைந்த பின் வெளியான அவரது கருத்துக்கள் அடங்கிய புத்தகம்
“Brief
Answers To Big Questions”
பெரிதும் வாசிக்கப்படுகிறது. இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பெரும் வினாக்களுக்கான
தெளிவான அறிவியல் பூர்வமான பதில்களை இப்புத்தகத்தில் காணலாம்.
இன்றைய இளைஞர்கள் ஸ்டீபன் ஹாக்கிங்கை தங்களது
வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளலாம்.
ஹாக்கிங் ஆய்வில் சில துளிகள்:
Ø
கருந்துளைகளின்
பல்வேறு பண்புகள்
Ø
பிரபஞ்சத்
தோற்றம்
Ø
பிரபஞ்சத்தின்
அனைத்து நிகழ்வுகளுக்குமான ஒரே சித்தாந்தம் பற்றிய ஆய்வு (Theory
of everything)
கட்டுரையாளர்,
G. ஸ்ரீநிவாசன்
ஓய்வு பெற்ற இயற்பியல்
பேராசிரியர்.
தொடர்புக்கு : physicsgs@gmail.com
G. ஸ்ரீநிவாசன்
0 கருத்துகள்